பொன்சேகாவுக்கு முக்கிய பதவி! சஜித் அறிவிப்பு

Spread the love
பொன்சேகாவுக்கு முக்கிய பதவி! சஜித் அறிவிப்பு

தேர்தலில் வெற்றிபெற்றதும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் தவறு செய்தால், அவற்றை சரிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அத்தோடு பொதுமக்கள் முன் வந்து அவர்களிடமிருந்து மன்னிப்பு கோரவும் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்.

தனது சொந்த குடும்பத்திற்கும் தங்கள் உறவினர்களுக்கும் முதலிடம் கொடுக்கும் ஒரு தலைவர் இந்த நாட்டிற்கு தேவையில்லை.

மேலும் இந்த நாட்டின் எதிர்காலத்தை ஒரு மாளிகையின் உள்ளே இருக்கும் ஒரு குடும்பம் தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டின் எதிர்காலத்தை இந்த நாட்டின் கடின உழைப்பாளிகளே தீர்மானிக்க வேண்டும்.

நாம் உருவாக்கும் புதிய நாட்டில் திருட்டு, மோசடி மற்றும் ஊழலுக்கு இடமில்லை. இந்த நாடு இதுவரை கண்டிராத தூய்மையான அரசாங்கமாக நமது அரசாங்கம் மாறும்.

இதற்கு எதிராக வேலை செய்ய விரும்பும் ஒருவர் இருந்தால், அவர்கள் மூட்டை கட்டிக்கொண்டு இப்போதே வீட்டிற்கு செல்ல வேண்டும்.

மேலும் இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அந்த பொறுப்பை, தங்களை நிரூபித்து, உண்மையில் போரில் சண்டையிட்ட ஒருவரிடம்தான் நாம் ஒப்படைக்க வேண்டும். அந்தவகையில் தேசிய பாதுகாப்பை பேணும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்.

அத்தோடு எங்கள் நிர்வாகத்தின் கீழ், சிறைக்கு செல்பவர்களை தீர்மானிப்பவர்களாக அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அந்த பொறுப்பு நீதி அமைப்புக்கு விடப்படும்” என்றார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க ரவி கருணாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites